×

ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ரமணா படத்துக்கே சவால் விடும் வகையில் பிணத்துக்கு சிகிச்சை அளித்து பல கோடி மோசடி

ரமணா பட பாணியில், ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பிணத்துக்கு சிகிச்சை அளித்து பல கோடி சுருட்டிய சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டம், பிரதமர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகச் செயல்படுத்தப்படுகிறது. ஏழைகள் இலவச மருத்துவ சிகிச்சைகள் பெறும் வகையில், 2018ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் சேரும் குடும்பங்கள், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் செலவிலான மருத்துவ சிகிச்சைகள் பெறலாம். நாடு முழுவதும் சுமார் 10.74 கோடி குடும்பங்கள் பலன் பெறுவதை இலக்காகக் கொண்ட இதில், 7.87 கோடி குடும்பங்கள் பதிவு செய்துள்ளதாக, தேசிய சுகாதார ஆணைய புள்ளி விவரம் தெரிவிக்கிறது. பின்னர் இந்தத் திட்ட பயனாளிகள் இலக்கு 12 கோடியாக உயர்த்தப்பட்டு,ஒப்புதலும் அளிக்கப்பட்டது.

இந்த திட்டம் குறித்து சிஏஜி தணிக்கை செய்து, நாடாளுமன்றத்தில் சமீபத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது. இதில் பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் நடந்துள்ளதை அம்பலப்படுத்தியுள்ளது. டம்மி மொபைல் எண் மூலம் பலர் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் பெயரில் சிகிச்சை பெற்ற விவரங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், தகுதியான நபர்களாக இருந்தும் திட்டத்தில் சேர்க்கப்படாமல் விடுபட்டுள்ளனர். இறந்தவர்கள் என அறிவிக்கப்பட்டவர்கள் கூட, இந்தத் திட்டத்தில் சிகிச்சை பெற்றதாக கணக்கு எழுதப்பட்டுள்ளது என்பதை சிஏஜி கண்டு பிடித்து தெரிவித்துள்ளது. பிணத்துக்கு சிகிச்சை அளித்து நடந்த மோசடியை ரமணா திரைப்படம் அம்பலப்படுத்தியிருந்தது. ஏறக்குறைய அதே காட்சியை நினைவுபடுத்தும் வகையில் தான் இந்த ஊழல் அமைந்துள்ளது என பலரும் விமர்சிக்கின்றனர்.

அதாவது, ஆயுஷ்மான் பாரத் திட்ட பயனாளிகள் விவரம் அடங்கிய தகவல் தொகுப்பில், 88,760 நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெறும்போது இறந்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இறந்தவர்கள் என அறிவிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து இந்த திட்டத்தில் சிகிச்சை பெற்றுள்ளது போல் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக , சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், ஏற்கனவே இறந்துவிட்ட இவர்களுக்கு புதிதாக சிகிச்சை வழங்கப்பட்டதாக 2,14,923 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பணம் பெறப்பட்டுள்ளது. இதில், சிகிச்சை செலவு கோரிய 3,903 விண்ணப்பங்களின் அடிப்படையில் மட்டும் ரூ.6.97 கோடி செட்டில்மென்ட் செய்யப்பட்டுள்ளது.
அப்படியானால், இறந்தவர்கள் என அறிவிக்கப்பட்ட பிறகும், சிகிச்சை பெற்றது போல் கணக்கு காண்பித்து மோசடி நடந்துள்ளதா, இதன்மூலம் பல கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளதா என எதிர்க்கட்சிகள் தரப்பில் கேள்வி எழுப்புகின்றனர். ரமணா பட பாணியில் இந்த மோசடி நடந்துள்ளது என்றுதான் கூற வேண்டும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஏழைகளுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட திட்டத்திலும் கூட இப்படி ஒரு பகீர் தகவல் வெளியாகியுள்ளது, பலரது மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

ஒரே அடையாள எண்ணில் பல பதிவுகள்: ஆயுஷ்மான் திட்டத்தில் நடந்த மற்றொரு முறைகேடு குறித்து குறிப்பிட்டுள்ள சிஏஜி, ஒரே அடையாள எண் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளது. அதாவது, 1,05,138 குடும்பங்களுக்கான காப்பீட்டு அடையாள எண் இரண்டு இடங்களிலும், 51,996 பேரின் அடையாள எண் 3 இடங்களிலும், 42 அடையாள எண்கள் 4 இடங்களிலும் என மொத்தம் 1,57,176 அடையாள எண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவாகியுள்ளன. கணினி மூலம் அனைத்தும் கையாளப்படும் நிலையில், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் நீக்கப்படாதது எப்படி? இதன் மூலம் முறைகேடு எதுவும் அரங்கேறியுள்ளதா என் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிகிச்சையே பெறாமல் மோசடி? இந்த திட்டத்தின் கீழ் உள் நோயாளியாக சிகிச்சை பெறுவோர், மருத்துவமனையில் அட்மிஷன் செய்யப்பட்ட நாள் முதல் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் ஆவது வரை பெற்ற சிகிச்சை விவரங்களை அறிக்கையாக சமர்ப்பித்துதான், காப்பீட்டு தொகை கோரி பெறப்படுகிறது. ஆனால், அட்மிஷன் தேதிக்கு முன்பாகவே டிஸ்சார்ஜ் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அட்மிஷன் செய்யாமலேயே சிகிச்சை செய்ததாக கணக்குக் காட்டி காப்பீட்டு திட்ட பணம் சுருட்டப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன்படி மொத்தம் 45,845 காப்பீடு கோரிக்கை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அவற்றுக்கு ரூ.22,49,61,538 செட்டில்மென்ட் செய்யல்பட்டுள்ளதாக சிஏஜி தெரிவித்துள்ளது.

இதுபோல், ஒரே நோயாளி, பல்வேறு மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் சிகிச்சை பெற்றதும் அம்பலம் ஆகியுள்ளது. உதாரணமாக, 48,387 நோயாளிகள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாக 78,396 காப்பீட்டு பணம் கோரி கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு செட்டில்மென்ட் பெறப்பட்டுள்ளன. இதுபோல், இந்த திட்டத்தில் குழந்தை பெற்ற பெண்ணின் காப்பீட்டு திட்ட எண்ணில், வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர், அதில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் முன்னரே, அதே நபர் வேறு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இதுபோல், மருத்துவமனையில் உள்ள படுக்கை எண்ணிக்கைக்கும் மேலான எண்ணிக்கையில் ஒரே நேரத்தில் நோயாளிகள் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற முன் அனுமதி கோரி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆண்டில் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மட்டுமே மருத்துவ காப்பீடு என்ற உச்சவரம்பு உள்ள நிலையிலும், அதற்கும் மேல் காப்பீட்டு பணம் கோரி பெறப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதுமட்டுமின்றி, டிஜிட்டல் முறையில் திட்டங்களை செயல்படுத்துவதாக கூறும் ஒன்றிய பாஜ அரசு, அனைத்தையும் ஆதார் அடிப்படையிலேயே மேற்கொள்வதாக கூறுகிறது. அப்படியிருந்தும், ஒரே ஆதார் எண்ணில் பல்வேறு பயனாளிகள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். 000000000000 என டம்மி ஆதார் எண்ணில் 1,285 பேர் உட்பட மொத்தம் 7 ஆதார் எண்களில் 4,761 பயனாகளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி, செயல்படாத டம்மி மொபைல் எண்களுக்கு எதிராக 7.5 லட்சம் பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதாவது இவர்களுக்கான மொபைல் எண்களாக 9999999999, 8888888888, 9000000000 என்ற மொபைல் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுபோல், மொபைல் எண்களாக 20, 1435, 185397 ஆகிய எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இது இந்த திட்டத்தில் மெகா ஊழல் செய்வதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், இந்த திட்டத்தில் மருத்துவமனைகள் இணைவதற்கு தகுதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. ஆனால், போதிய உள்கட்டமைப்பு வசதி, மருத்துவ நிபுணர்கள் இல்லாத மருத்துவமனைகளுக்கு கூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், மருத்துவமனை பதிவுச் சான்றிதழ், ஆம்புலன்ஸ் சேவை உள்ளதற்கான பதிவுச் சான்றிதழ், தீயணைப்பு துறை சான்றிதழ் போன்ற அத்தியாவசிய சான்றிதழ் இல்லாத மருத்துவமனைகளுக்கு இந்த திட்டத்தில் இணைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது எப்படிசாத்தியம் என சிஏஜி கேள்வி எழுப்பியுள்ளது.

இப்படி, இந்த திட்டத்தின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஏராளமான முறைகேடுகள், நிர்வாக சீர்கேடுகள் போன்றவற்றை சிஏஜி அடுக்கடுக்காகப் பட்டியலிட்டுள்ளது. இந்த புள்ளி விவரங்கள், தணிக்கை விவரங்கள் அனைத்தும் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக ரமணா பட பாணியில் பிணத்துக்கு சிகிச்சை வழங்கி மோசடி, ஒரே நேரத்தில் நோயாளிகளுக்கு பல மருத்துமனைகளுக்கு சிகிச்சை என, ஏழைகளுக்கான வடிவமைக்கப்பட்ட காப்பீட்டு திட்டத்தில் அரங்கேறிய அவலங்கள் ஆகியவை ஒன்றிய பாஜ அரசு திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தி வருகிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று பல்வேறு துறையினரும் விமர்சிக்கின்றனர்.

The post ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ரமணா படத்துக்கே சவால் விடும் வகையில் பிணத்துக்கு சிகிச்சை அளித்து பல கோடி மோசடி appeared first on Dinakaran.

Tags : union government ,Ayushman Bharat Yojana ,
× RELATED திண்டுக்கல் சந்தையில் வெங்காய...